மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு ஆடியோவினை வெளியிட்டனர்.
இதில் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விஜய் சேதுபதி, அனிருத், நடிகர் விஜய், மாளவிகா மோகனன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. சென்ற முறை பிகில் பட ஆடியோ வெளியீட்டின் பொழுது ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் காரணமாக, ரசிகர்கள் அழைக்கப்படவில்லை என, நடிகர் விஜய் கூறினார்.
நடிகர் விஜய் என்ன பேசுவார் எனப் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. மேடையேறிய விஜய், வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடினார். அவருடன், நடிகர் சாந்தனுவும் இணைந்து நடனமாடினார். பின்னர் பேசிய நடிகர் விஜய், ரசிகர்களை சந்திக்காதது வருத்தமாக உள்ளது எனவும் கூறினார். எப்பொழுதும், சாதாரண உடையில் தான் வருகின்றீர்கள். எனவே இந்த முறை, நீங்கள் கோட் ஷூட் போட்டு வாருங்கள் என, தன்னுடைய மேக்கப் மேன் கூறியதாக அவர் கூறினார்.
அவர் தன்னுடைய உடை நன்றாக உள்ளதா, எனவும் கேட்டார். பின்னர், இது என்னுடைய நண்பர் அஜித் போல உடை அணிந்துள்ளேன் எனக் கூறினார். அவ்வளவு தான். அந்த அரங்கமே அதிர்ந்து விட்டது. அமர்ந்திருந்த அனைவரும், தல, தல எனக் கத்த ஆரம்பித்துவிட்டனர். அதனைக் கண்ட நடிகர் விஜய், சில நிமிடம் அமைதியாக அதனைப் பார்த்து ரசித்தார். ரசிகர்கள் கூச்சலிட்டு, ஆராவாரம் செய்தனர். பின்னர், அவர் பேசுகையில், இளைய தளபதியாக இருந்த பொழுது, எவ்வித ஐடி ரெய்டும் கிடையாது.
ஆனால், தளபதியாக மாறிய பின், ஐடி ரெய்டு வருகின்றது. இருப்பினும், ஒரு பிரச்சனையும் இல்லை. என்ன நடந்தாலும், நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.