கட்சி ஆரம்பித்தது எனக்கு தெரியாது! விலகிய விஜயின் தாய்! சிக்கலில் எஸ்ஏசி!

07 November 2020 அரசியல்
vijaydonates.jpg

விஜய்க்கும் அவருடையத் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையில், தற்பொழுது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் பல மேடைகளில், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டினைத் தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில், அவருடையத் தந்தை தற்பொழுது புதியக் கட்சியினை விஜயின் பெயரில் ஆரம்பித்து உள்ளார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்றப் பெயரில், புதியக் கட்சி ஒன்றினை எஸ்ஏசி ஆரம்பித்துள்ளார். அந்தக் கட்சியின் தலைவராக பரந்தாமனும், செயலாளராக எஸ்ஏசியும், பொருளாளராக அவருடைய தாய் ஷோபானவும் இணைந்து இருந்தனர். இது குறித்து பேசிய எஸ்ஏசி, நான் தான் விஜய் ரசிகர் மன்றத்தின் முதல் தலைவரும், ரசிகரும் ஆவேன். அதனடிப்படையிலேயே, இந்தக் கட்சியினை ஆரம்பித்து உள்ளேன். இதற்கும், விஜய்க்கும் எவ்வித சம்மதமும் கிடையாது எனக் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், விஜயின் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் புதியக் கட்சியினை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவித்து கொள்கின்றேன். இதன் மூலம் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கையும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தைக் கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அல்லது கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன். அக்கட்சிக்கும், நமக்கும் நம்முடைய இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் என்னுடையப் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ, எனது அகிய இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த சூழலில், தற்பொழுது விஜயின் தாய் இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார். அதில் புதியதாக அசோசியேசன் ஆரம்பிக்கின்றார் என்று தான், என்னுடைய கணவர் எஸ்ஏசி, என்னிடம் கையெழுத்து வாங்கினார். அவர் கட்சி ஆரம்பிக்கின்றார் என்றுக் கூறவில்லை. இந்த சூழ்நிலையில், விஜயும் அவருடையத் தந்தையும் பேசிக் கொள்வது கிடையாது எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, விஜய் அரசியலுக்கு வருவார் என வெளியிடங்களில் பேசி வந்ததால், விஜய் அவருடையத் தந்தையுடன் பேசுவது இல்லை என்றுக் கூறியிருக்கின்றார். எஸ்ஏசி ஆரம்பித்துள்ளக் கட்சியில் இருந்து, ஷோபனா தற்பொழுது விலகியும் உள்ளார். விஜயின் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றுவதில், எனது மகனுக்குத் துளியும் விருப்பம் இல்லை எனவும் கூறியிருக்கின்றார். இது தற்பொழுது ஒரே குடும்பத்தில் சலசலப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS