பொருளாதார மந்தம் என்று கூறி, ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தியில் பெருத்த அடி விழுந்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது ஐடி துறையிலும் ஆள்நீக்கம் ஆரம்பமாகி உள்ளது. இவைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், இந்தியாவின் மிகப் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் நாட்டினை பூர்விகமாகக் கொண்ட வோடாபோன் நிறுவனத்திற்கு, இந்த ஆண்டில் மட்டும், சுமார் 50,922 கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் கால்பகுதியினைக் காட்டிலும், இரண்டாவது கால் பகுதியில் மாபெரும் நஷ்டத்தினை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. அந்நிறுவனம் முதல் கால் பகுதியினைக் காட்டிலும், இரண்டாவது கால் பகுதியில் பல வசதிகளை அறிமுகப்படுத்திய போதிலும் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதே போல், இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்திற்கு 23,044 கோடி ரூபாய் அளவிற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனமும், இரண்டாவது கால் பகுதியில் பலவிதமான வசதிகளை அறிமுகம் செய்த போதிலும், இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு நடந்துள்ள போதிலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 13,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது ஆச்சர்யமளிக்கும் விஷயமாகவே உள்ளது.