மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?

02 February 2021 அரசியல்
mamatabanajee.jpg

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் நேரடியாக பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸிற்கும் இடையில் தான் கடும் போட்டியானது நிலவி வருகின்றது.

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த முறை எப்படியாவது மேற்கு வங்கத்தில், ஆட்சியினைப் பிடித்தேத் தீர வேண்டும் என பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பாஜகவிற்கு பல எம்பிக்களும், எம்எல்ஏக்களும் சேர்ந்து வருகின்றன. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரோ, அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக இல்லை. தொடர்ந்து, பாஜகவினரை விமர்சித்து வருகின்றார்.

இந்த சூழலில், அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மே. வங்கத்திற்கு சென்று பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் எனவும், மேற்கு வங்கத்தில் மம்மதாவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நிலைமையோ அங்கு பரிதாபமாக உள்ளது. அந்தக் கட்சியினைப் பற்றி, துளி அளவிற்கு கூட செய்திகளோ, விவரங்களோ வருவதே கிடையாது. ஆனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைக்க உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது, இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளது.

பாஜகவோ, அங்குள்ள இந்து மதக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால், நேரடிப் போட்டியானது பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியினை பாஜகவோ அல்லது திரிணாமுல் காங்கிரஸோ எதிர்க்கவில்லை. மாறாக, இவர்களுக்குள்ளேயே போட்டிப் போட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகின்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 44.91% சதவிகித வாக்குகளுடன் 211 இடங்களில் வென்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது ஆட்சிக்கு வந்தது. அங்கு மொத்தம் 295 சட்டமொன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே, போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதிலிருந்தே, அந்த மாநிலத்தில், பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது பற்றி அறிய இயலும். மேலும், சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக, மேற்கு வங்கம் முழுவதும் கடுமையானப் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே, பாஜகவிற்கு எதிராக வாக்குகளாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, மேற்கு வங்கத்தில் பாஜக கட்சியானது 100 முதல் 120 இடங்களில் வெல்வதற்கான வாய்ப்புகளே உள்ளன. காங்கிரஸ் கட்சியானது 15 முதல் 25 தொகுதிகளில் வென்றால் அது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், குறைந்த வாக்கு சதவிகிதத்தினைப் பெற்றாலும், 140 முதல் 155 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பெரும்பாலான பத்திரிக்கைகள் கருத்துக் கணிப்பு நடத்திய போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றே முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை முன்னிட்டு, இந்த வெற்றி விகிதமானது கூடுவதற்கோ அல்லது குறைவதற்கோ வாய்ப்பு உள்ளதே அன்றி, இந்தக் கணிப்பிலோ அல்லது வெற்றி பெறும், தோல்வி பெறும் கட்சியிலோ எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை.

HOT NEWS