அடுத்த அபாயக் கட்ட எச்சரிக்கைக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, உலகின் அனைத்து இடங்களிலும் இந்த வைரஸானது பரவி இருக்கின்றது. இதனால், இரண்டரை கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒன்பது லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து, தினமும் புதிய புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இது குறித்து தினமும், உலக சுகாதார மையம் செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது. அதன்படி, அதன் தலைவர் டெட்ரோஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், உலகம் இதற்கு முன்னர் பலவிதமான அவசரகால அபாய எச்சரிக்கைகளை சந்தித்து உள்ளது.
இது ஒன்றும் புதிதல்ல. இது முடிவும் அல்ல. இத்துடன் இந்த எச்சரிக்கைகள் நிற்கப் போவது கிடையாது. ஆதலால், அனைத்து உலக நாடுகளும் பொது சுகாதாரத்தில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். அதிகளவில் அக்கறைச் செலுத்த வேண்டும். அடுத்த அபாயக் கட்டத்திற்கு முன் கூட்டியே நாம் எச்சரிக்கையாக இருப்பது தான், புத்திசாலித்தனம். அப்பொழுது தான், இப்படிப்பட்ட பிரச்சனைகளை நம்மால் திறம்பட சமாளிக்க இயலும் என்றுக் கூறியுள்ளார்.