கடவுளுக்காகவும், கடவுளின் செயலுக்காகவும் காத்திருக்க முடியாது எனவும், 2021ம் ஆண்டு ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து தயாராகிவிடும் எனவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலில் உலக அளவில், இந்திய நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இது விரைவில், நம்பர் ஒன் இடத்தினைப் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு இந்த வைரஸ் பரவுதலின் வேகம் நல்ல, வீரியமாக உள்ளது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
இந்தியாவும் தற்பொழுது, கோவாக்ஸின் உள்ளிட்ட 3 மருந்துகளை சோதனை செய்து வருகின்றது. இது குறித்து தற்பொழுது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் பேசுகையில், கொரோனா பெருந்தொற்றால் இந்தியா நாடே, மூச்சு விடத் திணறி வருகின்றது. கடவுளின் செயலுக்காக நம்மால் காத்திருக்க முடியாது. வருகின்ற 2021ம் ஆண்டின் ஆரம்பத்திற்குள்ளேயே இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும்.
கொரோனாவிற்கு எதிராக செயல்பட்டு, மக்களைப் பாதுகாப்பு வருகின்ற முன்களப் பணியாளர்களைப் பற்றி பேசுகையில், நாம் கொரோனா எதிர்த்து போராடுவதற்கு கொரோனா வாரியர்ஸாக செயல்பட்டு வருகின்ற முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியமான ஒன்றாகும். அவர்களுக்கான பெருந்தொற்று சட்டத்தினை தாக்கல் செய்து பேசுகையில், யாராவது முன்களப் பணியாளர்களைத் தாக்கினாலோ, கஷ்டப்படுத்தினாலோ அவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கப்படும்.
சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அந்தப் பிரச்சனைகளை விசாரிப்பார். மேலும், அந்த விசாரணையானது ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் முன்களப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 50,000 முதல் 2,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.