இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5% விகிதமாக குறையும் என, உலக வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் விலை உயர்வு, திடீர் பணமதிப்பிழப்பு, அதிகப்படியான வரி விதிப்பு உட்பட்ட காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
இந்தியாவில் யாரும் 5 ரூபாய் கொடுத்து, பிஸ்கட் வாங்கிக் கூட உண்ணுவதில்லை என, பார்லி நிர்வாகம் வெளிப்படையாகக் கூறியது. ஆட்டோமொபைல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளது என, பல உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் கவலைத் தெரிவித்தனர். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறைகளை அறிவித்தது. இதனால், பலரும் தங்களுடைய வேலைகளை இழந்தனர்.
இந்தியா முழுவதுமே, இந்தப் பிரச்சனைப் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதனால், தொழிலதிபர்கள் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். மேலும், வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்த மாதிரியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, 2019-2020 நடப்பு நிதியாண்டில் 5% ஆக இருக்கும் என இந்திய அரசாங்கம் முன்பே கூறியிருந்தது. இந்நிலையில், உலக வங்கியானது, இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விகிதமானது, நடப்பு நிதியாண்டில் 5% ஆக குறையும் என்று கணித்துள்ளது. ஆனால், பல நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 3% இருந்து 4% வரையில் மட்டுமே இருக்கும் என்று கூறுகின்றனர்.